Saturday, September 18, 2010
மெட்ரிக்குலேசன் பள்ளிகளை அரசுடமையாக்கினால் என்ன?
மெட்ரிக்குலேஷன் பள்ளி மாஃபியாக்கள் அரசை எதிர்த்து தங்களது பலத்தை காட்ட தொடங்கி விட்டார்கள்.1.கல்விகட்டண நிர்ணயத்துக்கு நீதிமன்றத்தில் ஏறி இடைக்கால் தடை வாங்கியது.2. தமிழ்நாட்டின் ஒரு மூலையில் ஒரு மாணவன் விபத்தில் இறந்ததையடுத்து அந்த பள்ளி பெற்றோர்களால் சூறையாடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் எல்லாம் மூடப்பட வேண்டும் என்று அறவிப்பு.
ஆக...இவர்கள் நினைத்தால் பள்ளிகளை பூட்டிவிட்டு மாணவர்களின் படிப்பை தடுக்க முடியும் என்பது தான் நிலைமை. ஆக இந்த பள்ளிகளை எல்லாம் அரசு உடைமை ஆக்கினால் மட்டுமே இந்த மிரட்டல்கள் எல்லாவற்றுக்கு தீர்வு. இவர்கள் என்ன லட்சணத்தில் பள்ளி நடத்துகிறார்கள் என்பதற்கு எதுவும் ஆதாரம் இருக்கிறதா? இவர்களின் லட்சணம் என்ன...பார்க்கலாம்.
தங்கள் குழந்தைகள் நுனிநாக்கு ஆங்கிலம் பேச வேண்டும். இது தான் நகரத்தில் வாழும் ஒரு நடுத்தரவாசிகளின் கனவு. பெற்ற பிள்ளைகளின் அறிவுக்கண்ணை திறக்க வேண்டும், எப்படியாவது பிள்ளைகளை படிக்க வைத்து டாக்டராகவோ என்ஜினியராகவோ ஆக்கிவிட வேண்டும். அவர்கள் கோட்டும் சூட்டும் போட்டு துரைமார்களை போல ஆங்கிலத்தில் வெளுத்துக்கட்ட வேண்டும்.இந்த கனவுலகத்தை புரிந்து கொண்டு இந்த குட்டையில் வலைவீசி மீன் பிடிக்க முளைத்தவை தான் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்.
ஆங்கிலேயே கிழக்கிந்தியக் கம்பெனி தான் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கான அஸ்திவாரத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது. அது வரை சான்றிதழ் கல்வித்திட்டம்,கட்டுப்பாடுகள் இல்லாத திண்ணைக்கல்வி, குருகுலக்கல்வி போன்றவை தான் இருந்தன். கிளார்க்குகளை உருவாக்கும் மெக்கலே அளித்த குறிப்புகளை தொடரந்து தான் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் ஐரோப்பிய அறிவியல் பாடங்களை நடத்தும் பள்ளிகளை தொடங்கியதாக வரலாறு கூறுகிறது. ஆங்கிலம் வாயிலாக தான் அப்போது நீதிமன்றங்களில் வாதாட முடியும் என்ற நிலை வேறு இருந்ததால் ஆங்கிலக்கல்வி புகழ்பெற்றது.
தமிழ்நாட்டில் 1984 -85 நிலவரப்படி 20 உயர்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இருந்தன. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்கில் பெருகியிருக்கிறது.
இப்போது ஒரு ஓட்டு வீடு கொஞ்சம் காலி இடம் இருந்தால் கூட அங்கே ஒரு ஆங்கிலப்பள்ளி என்று போர்டுகள் இளித்துக் கொண்டிருக்கின்றன. சிட்டிபாபு அறிக்கை கூறுவதன்படி,சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1852 ல் நாடு முழுவதும் வெறும் 52 ஆக இருந்த இந்த பள்ளிகளின் எண்ணிக்கை 2004 ஆம் ஆண்டுவாக்கில் தமிழ்நாட்டில் மட்டும் 3200 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கை உயர்ந்த அளவு இந்த பள்ளிகளின் தரம் உயர்ந்திருந்ததா என்றால் இல்லை என்பது தான் பதில். பெரும்பாலும் பள்ளி பிசினஸ் கையை சுட்டுக் கொள்ளாத காசு கொட்டும் ஒரு தொழில் என்பது தான் பெரும்பாலான பள்ளிகளின் நோக்கம் என்பதை சொல்ல வேண்டியதே இல்லை. 2004 க்கு முன்னதாக இப்படி புற்றீசல் போல முளைத்த மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கையை கண்டு மிரண்டு போன அரசு அந்த பள்ளிகளுக்கு சில விதிமுறைகளை வகுத்தது.
பொதுவாக தரத்தை மதிப்பிட பல அளவுகோல்கள் இருந்தாலும் மூன்று அம்சங்களை முக்கியமாக எடுத்துக் கொள்ளலாம். அவை பள்ளியின் எவ்வளவு இடத்தில் அமைந்துள்ளது. கட்டிடங்கள் போதிய அளவு காற்று வெளிச்சம் வருமளவு வசதியான அமைப்புடையதா? ஆசிரியர்கள் போதிய கல்வித்தகுதியை உடையவர்களாக இருக்கிறார்களா? இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் ஆளுமை, தேர்ச்சிவிகிதம்,தனித்திறன் மற்றும் ஒழுக்கம் ஆகியவை எந்த அளவில் இருக்கின்றன என்பது போன்றவற்றை ஆய்வு செய்தால் அந்த பள்ளிகளின் ஒட்டுமொத்த நிர்வாகத்தின் யோக்கிதையும் லட்சணமும் துல்லியமாக தெரிந்து விடும்.
ஆனால் ஒரு ஆய்வை மேற்கொண்டதில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் 40 சதவீத மெட்ரிகுலேசன் பள்ளிகளில் மாணவர்கள் விளையாட்டு திறனை வளர்த்துக் கொள்ள உதவும் விளையாட்டு மைதானமே கிடையாது. 21 சதவீத பள்ளிகளில் நூலகம் என்றால் என்பது தான் கேட்குமளவுக்கு நிலைமை.
பின்தங்கிய மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் இருந்த அளவு கூட சென்னை, மதுரையில் இயங்கிய பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதிகள் பல பள்ளிகளில் இல்லை. இன்னும் சில பள்ளிகளில் கம்ப்யூட்டரின் வரைபடத்தை வரைந்து காட்டி அதில் உள்ள பாகங்களை சொல்லி தரும் நிலைமை தான் இருப்பதாக எல்லாம் ஆய்வில் தெரியவந்தன.
இதிலும் 40 சதவீத பள்ளிகளில் வீட்டில் பொழுது போகாமல் இருந்தவர்களை எல்லாம் அழைத்து வந்து ஆசிரியர்களாக மாற்றி மனம்போன போக்கில் பாடம் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இவர்களுக்கு பட்டமோ, பட்டயமோ கூட இல்லை என்பது தான் கொடுமை. அவர்களிலும் கூட ஒரு சிலர் இப்படி சில பள்ளிக்கூடஙகளில் வாத்தியார் பயிற்சி எடுத்தவுடம் எக்ஸ்பீரியன்ஸ் கணக்கு காட்டி இது போன்ற மற்றொரு பள்ளிக்கு அப்ளிகேசன் போட்டு கூடுதல் சம்பளத்தில் வேலைக்கு போவது தான் அதை விட ஆச்சரியம். இப்படி கத்துக்குட்டி வாத்தியார்களில் வெறும் 10 சதவீதம் பேர் தான் ஒரே பள்ளியில் 10 ஆண்டுகளுக்கும மேல் குப்பை கொட்டுகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர்கள் அங்கிருக்கும் பாடப்புத்தகங்களையும் மாணவர்களையும் புரிந்து கொள்வதற்குள் அந்த ஆண்டு இறுதி தேர்வு நெருங்கிவிடும். மாணவர்களும் புரிந்த வரை தேர்வை எழுதிவிட்டு அரைகுறை மதிப்பெண்ணுடன் வந்து ஏதோ ஒரு கல்லூரியில் என்னவோ ஒரு பாடத்தில் டிகிரியோ எதுவோ படிக்க வேண்டியது தான். இப்படி லட்சணத்தில் தான் இன்றைய மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்ளன என்பது தான் கொடுமை. இவர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தங்களிடம் இருக்கும் தகுதிகளை எல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க துணிச்சல் இருக்கிறதா?
விதிமுறைகள் எவை?
மெட்ரிகுலேஷன் கல்வித்தரம் தொடர்பாக சிட்டிபாபு அறிக்கை பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. அதில், இந்த பள்ளிகளை மாநகராட்சி எல்லைக்குள் துவக்க வேண்டுமானால் அந்த பள்ளியின் பெயரில் ஆறு கிரவுண்ட் அல்லது 33 சென்ட் நிலப்பரப்பும், மாவட்ட தலைநகருக்குள் தொடங்க வேண்டுமானால் எட்டுகிரவுண்ட் அல்லது 44 சென்ட் நிலமும், நகராட்சியில் பத்து கிரவுண்ட் அல்லது 55 சென்ட் நிலமும், நகர பஞ்சாயத்துக்களில் ஒரு ஏக்கரும், கிராமங்களில் 3 ஏக்கரும் இருக்க வேண்டும்.
ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம் 10 சதுர அடிகணக்கிடப்பட்டு வகுப்பறைகள் அமைக்கப்பட வேண்டும். அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் நூலகம் கட்டாயம் அமைக்க வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
உயர்நிலைப்பள்ளியானால் 1500 நூல்களும், மேல்நிலைப்பள்ளியானால் 3000 நூல்களும், பாடங்களை விளக்க சிடிகளும்,வீடியோ,புரொஜெக்டர் சாதனங்களும் இருக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கை வரையறை செய்துள்ளது. இயற்பியல், வேதியியல், விலங்கியல் ஆகிய ஆய்வுக்கூடங்கள் தனித்தனியாக இருக்க வேண்டும். அத்துடன் விளையாட்டு மைதானங்களும் குறிப்பிட்ட பரப்பளவில் இருக்க வேண்டும்.
கேள்வி 1. இன்றைக்கு இப்படி விதிமுறைகளுடன் எத்தனை பள்ளிகள் இயங்குகின்றன.பள்ளிகல்வி இயக்குநரகம் இந்த பள்ளிகளுக்கு எல்லாம் எந்த அடிப்படையில அனுமதி அளித்தார்கள்?
1977 ஜுலையில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் நிறுவப்பட்டது. இந்த பள்ளிகள் தமது விருப்பத்தின் படி பாடத்திட்டங்களையும் பாடநூல்களையும் பின்பற்ற அனுமதிக்கப்பட்டது. ஆனால் இறுதி இரண்டு ஆண்டுகளுக்கு மாநில கல்வி தேர்வு இயக்குநரகம் அதாவது அரசு நிர்ணயித்துள்ள பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது தான் விதி. இதற்கு இடையில் எத்தனை பாடநூல் நிறுவனங்களிடம் கண்ட கண்ட புத்தகங்களையும் கமிஷனுக்காக வாங்கி குழந்தைகளின் தலையில் ஏற்றி பொதி சுமக்க வைக்கும் பள்ளிகள் தான் எத்தனை? இந்தியக்குழந்தைகளிடம் தங்கள் புத்தகங்களை பல ஆயிரம் கோடிகளில் வியாபாரம் செய்யும் அமெரிக்க புத்தகக்கம்பெனிகளிடமிருந்து இந்த மெட்ரிகுலேஷன் கல்வி தந்தைகள் வாங்கும் கமிஷன் எத்தனை லட்சம்?
கேள்வி 2. இந்த பகாசுர கம்பெனிகள் வடிவமைக்கும் புத்தகங்கள் எந்த அடிப்படையில் எந்த ஞானோதயத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன?
ஒரு சாதாரண மெட்ரிகுலேஷன் பள்ளியில் 800 குழந்தைகள் படிப்பதாக எடுத்துக்கொண்டு, ஒரு குழந்தைக்கு 30,000 பீஸ் என்று வைத்துக் கொண்டால் ஆண்டுக்கு வருமானம் 2 கோடியே 40 லட்சம். இப்படியே ஆண்டுக்கு ஆண்டு பெருக்கிக் கொண்டே போனால் அப்பாடி தலை சுற்றுகிறது...
கேள்வி 3. இந்த வருமானத்திற்கு எல்லாம் கணக்குகளை எப்படி பராமரிக்கிறார்கள்? இந்த வருமானம் எல்லாம் எங்கே போகிறது?
ஆக..இப்படி தங்கள் நோக்கத்திற்கு விளையாடும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை அரசுடைமையாக்கினால் தான் இந்த மெட்ரிக்குலேஷன் மாபியாக்கள் அடங்குவார்கள். இல்லாவிட்டால் அரசை மிரட்டுவதொடு ,பள்ளிகூடங்களை தங்கள் இஷ்டத்துக்கு இழுத்து பூட்டி நினைத்ததை சாதிக்க எண்ணுவார்கள்.ஆக....
ஒரு காலத்தில் தனியாரிடம் இயங்கிய பேருந்துகளையும், வங்கிகளையும் அரசுடையாமக்கிய போது எந்த எதிர்ப்பும் வரவில்லை. அது போல் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளையும் அரசுடமை ஆக்கினால் என்ன?
அரசுடமை ஆக்கினால் என்ன ஆகும் என்பதை இதை படிக்கும் பதிவர்களின் எண்ண அலைகளை பிரதிபலிக்க விட்டு விடுகிறேன்.தயவு செய்து தங்கள் பின்னூட்டம் வரவேற்கபடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
1 கருத்துரைகள்:
மிகத் தெளிவாகப் பல கேள்விகளை எழுப்பிச் செல்லும் பதிவு. விடைகளைத் தேடத்தேட பெருமூச்சுகள் மட்டுமே என்னிடமிருந்து...
Post a Comment