Pages

Thursday, October 7, 2010

எந்திரன் படமும் கோழி எச்சமும்

 
கதை 1
ஆகாயம் வெளுத்து கிடந்தது. விடியல் பொழுது.அடர்ந்த வெள்ளைத்தாடியுடனும் சிவந்த கண்களில் வாசிக்க முடியாத ஒரு வெறியோடு கூடிய முகம், வார்த்தை ஜாலத்தால் ரெண்டொரு நாளில் ஊர்மக்களை கவர்ந்து கொண்டவன் மஸ்தான். பிறகு ஊரில் பொழுது போக்காக மஸ்தானை அங்கிருந்த இளைஞர்கள் மோடி மஸ்தான் என்று சொல்லி வைக்க பின்னாளில் அது மோடி என்றாகி விட்டது. 

இந்த ஊருக்கு வருவதற்கு முன்னால் மோடி மஸ்தான் ஒரு சாதாரண தொழிலாளி. இயற்கையில் கோழி அறுப்பது பற்றி எதவும் தெரியாது. பீடி குடிப்பதில் மட்டும் சற்று லாவகமான நேர்த்தி இருக்கும்.
இந்த ஊருக்கு வந்த பிறகு மோடியின் தொழில் கோழி அறுப்பதாக ஆகிப்போனது. ஆனால் மோடியைப்பார்த்தால் கோழி அறுப்பவன் போல் தெரியாது. பொரிப்பா?கறியா? எனக்கேட்டு கோழிகளை அதற்குரிய நேர்த்தியோடு வெட்டித்துண்டுகளாக்கி கொடுக்கும் மோடியின் லாவகத்தில் ஊர்க்காரர்கள் கிறங்கிக்கிடந்தார்கள்.

மோடி கோழி அறுப்பது கூட அவன் கோழிகளை அவன் கோழிகளை காப்பாற்ற முயல்வது போலத்தான் தெரியும். கோழியின சிறகுகளை செல்லமாக பிடித்து தூக்குவான். சிறகையும் அதன் கால்களையும் ஒரு சேரப்பிடித்துக் கொண்டு கோழியின் வாயை விரித்து கொஞ்சமாக தண்ணீர் கொடுப்பான்.
கோழி தண்ணீரை குடித்து ஆசுவாசமாக தலையை நிமிர்த்தும் போது தன் சகாவிடம் கோழியின் கழுத்தை அதன் சங்கு முனையில் சரியாக பிடிக்கச்சொல்லி கூர் திட்டப்பட்ட கத்தியால் பதட்டமில்லாமல் புன்னகையோடு கோழியின் கழுத்தை சுற்றி அறுத்து தூக்கி வீசுவான். கோழி துடித்து உயிர் விடும் போது கைகளில் சிந்திய ரத்தக்கறையை தண்ணீரால் கழுவிவிட்டு நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்நது போவான். இது தான் மோடியின் கோழி அறுப்பு நேர்த்தி.மோடி ஒரு கோழிக்கு அறுக்க நாலணா வாங்கினான்.அந்த நாலாணவுக்குள் என்னவெல்லாம் இருக்கிறது என்பது மோடிக்கு துல்லியமாக தெரியும்.


கத்திக்கூர்மையும் புத்திக்கூர்மையும் கழுத்தறுக்கும் நேர்த்தியும் சரிசமமாக இருந்த இன்னொரு கோழிக்கடை வியாபாரியான பால் மேக்கரை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிய மோடி கத்தி தீட்டுவது ரொம்பவும் அழகானது. 

ஆற்றாங்கரையில் சின்னசின்ன உப்புக்கற்களை பொறுக்கி எடுத்து உரலில் போட்டு இடித்து தூளாக்கி குட்டிக்குரா பவுடர் டப்பாவில் போட்டு அடைத்துக்கொண்ட பொடி தூவி அங்கிருந்த பள்ளிவாசலின் பரபரத்த சிமெண்ட் சுவரின் மேல்பக்கம் மோடி கத்தி தீட்டும் வேகத்தை பார்த்தால் பள்ளிவாசலையே பொளந்து தள்ளிவிடுவான் போல தோன்றும். இதற்கு முன்னாள் ஒரு ஊரில் இப்படி கத்தி தீட்டியே ஒரு பள்ளிவாசலை பொளந்து தள்ளியதாகவும் பலரிடம் சொல்லியிருக்கிறான்.

மோடி கோழி அறுக்கும் மடக்கு கத்தியை எல்லோரையும் போலவே இடுப்பில் செருகி வைத்துக் கொள்ளாமல் முதுகுக்கு பின்னால் செருகி வைத்துக்கொள்வது வழக்கம். 

அதனால் அவன் உடலில் கத்தி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத விசித்திர நிலையில் மோடியின் உடலே கத்தியாகி போனது. மோடி இதனை தனது யுக்தி என்று சொல்லிக் கொள்வதுண்டு. மோடி பெரிய வித்தைக்காரன் என்று பெயர் பெற்றான்.


மோடியைப் பற்றிய கதைகள் கள்ளப்பருந்தை விட உயரமாக பறந்து திரிந்தன. வவ்வால்களை போல தலைகீழாக தொங்கின. இந்த கதைகளில சில எந்த முடிவுக்கும் வராமல் கழுத்தறுபட்டு துடிக்கும் கோழிகள் போல் துடிதுடித்து விழுந்து செத்தன.இப்படி மோடி மஸ்தானின் ஜெகஜால கில்லாடி வேலைகள் ஒரு வழியாக போய்க கொண்டிருந்தன. இதில் ஒரு கதை தான் மற்றொரு கோழிவியாபாரியான பால் மேக்கரிடம் எப்படி திடீர் என்று பணம் வந்தது என்பது பற்றிய கதை. 

அதாவது, பால் மேக்கர் ஒரு கோழியை அறுத்த போது அநத கோழியின் மூலம் (ஆசன வாய்) வழியாக இரண்டு வைரங்களை கொடுத்ததாகவும் அதன்பிறகு பால் மேக்கரின் வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டதாகவும், அவனுக்கு அமெரிக்கா சென்று கோழி அறுக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அமெரிக்காவில் கோழிகளை அறுக்க நவீன இயந்திரங்கள் வந்து விட்டதால் பால் மேக்கர் அமெரிக்கா செல்ல மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

கோழியின் மூலத்திலிருந்து வைரம் வருமா என்று புரியாத முட்டாள் மோடியும் கோழிகளின் மூலங்களை பார்தது துரத்த தொடங்கிவிட்டான். மோடியின் எண்ணத்தை அறிந்து கொண்ட கோழிகள் தங்களது குஞ்சுகளை இறக்கைகளுக்குள் பொத்தி வைத்து பாதுகாத்துக் கொண்டன. மோடி புதிதாக நான்கைந்து மடக்கு கத்திகளை வாங்கி முதுகுக்கு பின்னால் செருகிக் கொண்டே யோசித்து யோசித்து நடந்தான்.கோழியின் மூலத்திலிருந்து வைரம் வந்தது மட்டும் எப்படி என்பது மோடிக்கு புரிய நீண்டநாட்கள் பிடித்தது. அது வரை குழப்பமோ குழப்பம். எப்படியாவது இது போல் வைரங்களை வைத்து மூலம் வழியாக தள்ளும் கோழிகளை பிடித்து வயிற்றை அறுத்து வைரங்களை எடுத்து விடவேண்டும் என்று அலைந்தான். அது போல் வைரம் இருக்கும் கோழிகளை எல்லாம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அந்த ஊரில் இருக்கும் கோழிகளை எல்லாம் வாங்க தொடங்கினான். ஒரு கட்டத்தில் பெரிய கோழிப்பண்ணையே உருவாகி விட்டது. 

ஆனாலும் வைரத்தை அந்த கோழிகளில் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் விலைக்கு வாங்க முடியாத ஊர்க்கோழி ஏதாவது ஒன்றில் வைரம் இருக்கும் என்ற நோக்கத்தில் அந்த கோழியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக சூனியக்காரர்களை அழைத்து வந்து கோழி வேடம் போடச்சொல்லி உண்மைக் கோழிகளுடன் உரையாடி வைரம் வைத்திருக்கும் கோழியை கண்டுபிடித்து விடமுடியும் என்று திட்டம் போட்டான்.


'வைரக்கற்களுக்காய் குடல் உருவப்பட்ட கோழிகள்' என்ற மீரான் மைதீனின் சிறுகதையிலிருந்து ஒரு பகுதி சற்று மாற்றத்துடன்


எதார்த்தம் 2
சினிமாவிற்கு வயது 115. அதாவது தற்போது சினிமா தன்னுடைய இரண்டாவது நூற்றாண்டில் தொழில்நுட்பத்தின் உதவியால் மிகத்துல்லியமான காட்சி,மிக அற்புதமான வண்ணம்,மிகத்துல்லியமான ஒலி,கற்பனை செய்ய முடியாத இசை மற்றும் ஒலி சேர்ப்பு என்று தன்னை எவ்வளவு தான் அழகுபடுத்திக் கொண்டாலும் அதன் உயிரும்,ஆன்மாவும் அதன் கதை சொல்லும் விதத்திலும் பார்வையாளர்களின் அல்லது ரசிகனின் மனத்திலும் வேறு எதனாலும் ஏற்படுத்த முடியாத ஒரு உணர்வுக் கதம்பத்தை ஏற்படுத்துவதில் தான் உள்ளது. சினிமாவின் படைப்புத்திறன் என்பதற்கே இது தான் அடிப்படை.

இந்த அடிப்படையில் சிறந்த படங்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அந்த படங்களை இப்போது பார்த்தாலும் வயதாகமால் இருக்கிறது. படைப்பாளியின் படைப்புத் திறன் தன் திரைப்படத்தை நீண்ட காலத்திற்கு வயதாகாமல் பார்த்துக் கொள்வதில் தான் இருக்கிறது. பல படைப்பாளிகள் தொடக்கம் முதலே அற்புதமான படைப்புகளை இந்திய திரைப்பட உலகத்திற்கு அர்ப்பணித்துள்ளார்கள். 

இந்திய அளவஇன்றைக்கும் நினைவில் நிற்கும் சத்யஜித்ரேயின் படங்கள் வாழ்வின் ஆழத்தை, சமூகத்தின் மனநிலையை அற்புதமாக காட்டும் எளிய படங்களாக என்றைக்கு நினைவில் நின்று கெர்ண்டிருக்கின்றன. அமெரிக்க மக்களின் சிந்தனைக்கு அமெரிக்க இயக்குநரும் நடிகருமான கிளிண்ட் ஈஸ்ட்வுட் 1980 களில் எடுத்த பல படங்களை சொல்லலாம். இன்றைக்கும் அவர் பல அற்புதமான படங்களை தந்து கொண்டிருக்கிறார். ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட அவரது INVICTUS படம் ஒரு எதார்த்தமான மனிதனின் அழகான உணர்வுகளை சொல்லும் படம்.

இந்த படத்தின் கதை என்பது நெல்சன் மண்டேலாவுக்கும் ஒரு வெள்ளைக்கார கால்பந்தாட்ட விளையாட்டு வீரனுக்கும் இடையே உள்ள மதிப்பு மிக்க உறவை சொன்னது. மண்டேலா வெள்ளையர்களால் பல காலம் சிறையில் அடைக்கப்பட்ட போதும் அது பற்றி எந்த பழி வாங்கும் உணர்வும் இல்லாமல் கருப்பர்களுக்கு இணையாக தென்னாப்பிரிக்க வெள்ளையர்களையும் தன்னாட்டு குடிமகன்களாக மதித்தார் என்பதை காட்டியது. சமூகத்திற்கு மிகச்சிறந்த கருவை சொல்லியது.

தமிழ் திரைப்படங்களில் எதார்த்தமாக எடுக்கப்பட்ட வீடு, ஒரு சொட்டு தண்ணீருக்காக மக்கள் படும் பாட்டை சித்தரித்த தண்ணீர்...தண்ணீர் உள்பட சில படங்கள் முதல் உலக அளவில் கிளாடியேட்டர்,பென்கர்,டென் கமாண்ட்மெண்ட்ஸ் என்று பிரமிப்பூட்டும் படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். 

தரமான உலகப்பட விழாக்களில் சிறந்த படங்களாக தேர்வாகும் படங்கள் எல்லாம் தொழில் நுட்பத்தை பெரிதும் சாராமல், கதையையும், கதைக்காக தேர்வு செய்யப்பட்ட களம் மற்றும் கருவையும் இந்த கதை ஆரோக்கியமாக வளர்ந்து பிரசவிக்க உதவும் கதை சொல்லும் உத்தியையும் தான் நம்பியிருந்தன.
இது போல் ஒரு படைப்புக்கலைஞன் என்பவன் தனது வயது ஏற,ஏற வாழ்வின் ஆழத்தை,மனித உறவுகளின் சூட்சுமத்தை ஆழமாக புரிந்து கொள்கிறான். அவனது படைப்புகளில் அது துல்லியமாக வெளிப்படும் எனபது யதார்த்தம். எத்தனை ஆண்டுகாலம் நடித்தாலும் இயக்கினாலும் இந்த கலைத்திறன் இயற்கையாகவே அமையாதவர்கள் தான் என்றைக்கும் பாக்கெட் நிரம்பினால் போதும் என்ற மனோபாவத்தில் இருப்பவர்கள். 

இவர்களால் என்றைக்கும் எப்போதும் இளமையான இனிமையான சமூகத்திற்கான படங்களை தரவே முடியாது. 'காட்பாதர்' படத்தை எடுத்த புகழ்பெற்ற அமெரிக்க இயக்குநர் போர்டு கொப்பலா சொல்கிறார்,' சினிமாவின் வசீகரிப்புக்கு மிக முக்கிய காரணம், சினிமா திரையில் மலரும் போது அதில் வெளிப்படும் ஒரு மாயாஜாலத்தன்மை தான். மிகச்சிறந்த இயக்குநர்கள் எளிமையான கதையைக்கூட நேர்த்தியோடு சொல்லும் போது அந்த மறைந்திருக்கும் மாயாஜாலம் வெளிப்பட்டு பார்வையாளரை கட்டிப்போடும்.

அப்போது கதைபடித்து அழுதவர்களை விட சினிமா கதாபாத்திரங்களின் நடிப்பில் கட்டுண்டு அழுதவர்களே அதிகம். நம் உணர்வின் உள் நுழைந்து செல்லும் மாயசக்தி ஒரு அதீத சக்தி சினிமாவுக்கு மட்டுமே உள்ளது.இதை உணர்ந்து படமெடுப்பதில் தான் சினிமாவுக்கான தனித்திறன் மற்றும் கலைஞனின் படைப்பாற்றலை வெளிப்படுத்த முடியும்.
கடவுளை படைத்தவன் என்று சொல்வதுண்டு காரணம் படைப்பு என்பது சிறப்பு கலை. அதை எல்லோராலும் செய்து விட முடியாது. இன்றைக்கு மிகச்சிறந்த கலைஞர்கள் பலர் மறைந்து விட்டாலும் அவர்களது திரைப்படைப்புகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இது தான் படைப்பின் சாகாவரத்தன்மை.


எந்திரன் எதில் சேர்த்தி 3


இப்போது சொல்லுங்கள்...முதலில் சொன்ன கதைப்படியிலும் இரண்டாவது சொன்ன எதார்த்திலும், எந்திரனுக்கும் அதை தயாரித்த ஷங்கருக்கும் அதில் நடித்த ரஜினியும் எதில் பொருந்தி போகிறார்கள்?
இதில் நிஜம் எதுவென்றால், ஏற்கனவே ஊரில் இருந்த பால்வியாபாரியாக இருந்து கசாப்புக்டைக்காரனாக மாறிய பால்மேக்கரும், புதிதாக ஊருக்கு வந்த மஸ்தானும் கைகோர்த்தது தான் விசேஷம். கதையின் படி பால்மேக்கருக்கும் பணம் போதவில்லை. மோடி மஸ்தானுக்கும் கைஅரிப்பு. 

ஆனால் இருவரும் கூட்டு சேரவில்லை. இருவருக்கும் பணம் வேண்டும் என்பது தான் பொதுவான நோக்கம். இந்த ஆசைக்கு பால் மேக்கர் செய்த ஒரே காரியம், வார்த்தை ஜாலத்தாலும் (பஞ்சடயலாக்), எதுவும் இல்லாமல் சும்மா சுத்தி கோழி வெட்டும் மோடிமஸ்தானையும் கூட்டு சேர்ந்துகொணடு கோழிகளின் மூலத்திலிருந்து வைரம் வரும் என்று ஆசைப்பட்டது தான்.

ஆக...தற்போது மூன்றாவது நாளிலேயே தியேட்டர்கள் காற்றாடியிருக்கிறது. இன்டர்நெட்டிலும் எந்திரன் ஷங்கருக்கு பெப்பே காட்டியிருக்கிறது. ஆக.. கோழிகள் கசாப்புக்கடைக்காரர்களுக்கு அல்வா கொடுத்து விட்டன. இனி ஊரின் நிலவரத்தை ஏற்கனவே தெரிந்து வைந்திருத்தும் கத்தியை தீட்டிய முன்னாள் பால் வியாபாரிக்கும் இந்நாள்மோடிமஸ்தானும் கோழிகள் போட்ட எச்சம் தான் மிச்சம்.


முடிவிலும் முடிவு...உண்மையான சினிமாவின் எதார்த்தின் படி எந்திரன் சரித்திரத்திலும் இடம் பெறப்போவதில்லை. சாகாவரம் பெற்றதும் இல்லை. போகிற போக்கில் செய்யப்பட்ட ஒரு கண்கட்டு வித்தை. இதில் காட்பாதர் இயக்குநர் போர்டு கொப்பலா சொல்லியது போல் எந்த மாயாஜாலமும் இல்லை. ஆக....மொத்தத்தில் எந்திரன் ஒரு வைரமில்லாத ஆனால் வைரத்தை தேட நினைத்து பேராசைக்காரர்களுக்கு இறுதியில் கிடைக்க போகிற கூமுட்டை.

3 கருத்துரைகள்:

"ராஜா" said...

பின்னீட்டீங்க பாஸ் ... கலக்கல் பதிவு ... உங்கள் அனுமதியுடன் நான் இதை உங்கள் லிங்க் கொடுத்து என்னுடைய பதிவில் போட்டுக்கொள்ளலாமா?

Unknown said...

annmeegam enral enna

Unknown said...

what is the meanig of aanmeegam

 

Blogger

இங்கு வரும் செய்திகளுக்கு யாரும் பொறுப்பு அல்ல.